Thursday, November 27, 2008

குடும்பம், மனைவி, மக்கள் என்பதன் அருமையெல்லாம் நம்மில் பலருக்குத் தெரியாது. எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் பல குடும்பங்களைச் சுக்குநூறாக்கிக் கொண்டிருக்கிறது. இதோ, இந்தக் கற்பனைக் கதையைப் பாருங்கள்.
அவர்கள் இருவரும் வயதானவர்கள். நாற்பது வருடத் தாம்பத்தியம் நடத்தியவர்கள். மிகப்பெரிய செல்வந்தனாக வேண்டும் என்ற கனவில் மிதந்தவர் அவர். ஆனால், அவரது ஆசை நிறைவேறாமலேயே மரணப்படுக்கையில் விழுந்தார்.
அந்தக் கடைசிக் காலத்திலா வது மனைவியின் அன்பை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், உறவினர் ஒருவர் சொன்னார்... ''உன் மனைவி எத்தனை அன்பானவள் தெரியுமா? கல்யாணம் ஆன புதிதில், நீ உன் அலுவலகத்தில் பணத்தைக் கையாடல் செய்து வேலையை இழந்தாய். அப்போது உன் அப்பாவும் அம்மாவும்கூட 'நீ எனக்குப் பிள்ளையே கிடையாது' என்று
சொல்லி, உன்னைப் பிரிந்து போனார்கள். ஆனால், உன் மனைவி மட்டும் உன்னோடுதான் இருந்தாள்.
பிறகு பிஸினஸ் செய்யப்போகிறேன் என்று பல லட்ச ரூபாயை வங்கிக் கடனாக வாங்கி ஒரு ஷோரூம் ஆரம்பித்தாய். அதில் பெரிய நஷ்டம் வந்து கடன்காரனாகி கடைசியில் அந்த பிஸினஸ#ம் கைவிட்டுப் போனது. உன்னோடு நெருக்கமாயிருந்த நண்பர்கள்கூட அந்த நேரத்தில் விலகிப் போனார்கள். அப்போதும் உன் மனைவி உன்னோடு இருந்தாள்.
பிறகு கெட்ட சகவாசங்கள், தீய பழக்கங்கள் வந்து சேர, ஒழுக்கம் கெட்ட வாழ்க்கை வாழ்ந்து வியாதியஸ்தனானாய். அப்போது நீ பெற்ற பிள்ளைகளே, உன்னை உதறிவிட்டுப் போனார்கள். ஆனால், அப்போதும் உன்னோடு இருந்தது உன் மனைவி மட்டும்தான். இதிலிருந்து உனக்கு என்ன புரிகிறது?'' என்று அந்தக் கணவனை நோக்கிக் கேட்டார் உறவினர்.
அதற்குக் கணவர் சொன்னார்: ''எனக்குக் கெட்டது நடந்த ஒவ்வொரு நேரத்திலும் இவள் என் பக்கத்தில் இருந்திருக்கிறாள். இவள் துரதிர்ஷ்டத்தால்தான் நான் இப்படிக் கஷ்டப் பட்டிருக்கிறேன்...''
இன்னொரு வகை தம்பதிகளும் இருக்கிறார்கள்.
கார் வாங்க வேண்டும். அபார்ட்மெண்ட் வாங்க வேண்டும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெற வேண்டும் என்று சதா அலைந்து கொண்டே இருப்பார்கள். இந்த அலைச்சல் காரணமாக, கணவன் - மனைவி இரண்டு பேருக்கும் வீட்டில் பேசிக்கொள்ளக்கூட நேரம் கிடைக்காது.
அப்படியே பேசினாலும் 'உன் பி.எஃப்-ல் எத்தனை பணம் இருக்கிறது? உனக்கு பாங்க்கில் எவ்வளவு கடன் கொடுப்பார்கள்?' என்று ஏதோ கம்பெனி ஆடிட்டர்கள் மாதிரிதான் பேசிகொள்வார்கள்.
'அன்பு, அந்நியோன்யம், குழந்தைகள் - இதற்கெல்லாம் எப்போது நேரம் ஒதுக்கப்போகிறீர்கள்?' என்று கேட்டால்... 'கார், அபார்ட்மெண்ட் பதவி உயர்வு எல்லாம் வாங்கிய பிறகு' என்று சொல்வார்கள்.
வெற்றியையும் செல்வத்தையும் வாழ்க்கையில் தேட வேண்டியதுதான். தப்பு என்று யாராலும் சொல்ல முடியாது. ஆனால், எதை விலையாகக் கொடுத்து இதையெல்லாம் வாங்கப் போகிறோம் என்பதை நாம் கணக்கிட வேண்டியது அவசியம் இல்லையா?
மும்பைவாசிகள் பற்றி ஒரு கிண்டல் உண்டு. அதாவது, பணிக் காலத்தில் தங்களின் ஆரோக்கியம் எல்லாவற்றையும் விலையாகக் கொடுத்து, ஐம்பது வயது வரை அவர்கள் பணம் சம்பாதிப்பார்கள். அதன்பிறகு இழந்த ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறுவதற்காக, சம்பாதித்த பணத்தையெல்லாம் செலவழிப்பார்களாம்
அது ஒரு கிராமம்... அங்கே ஒரு வீடு. அந்த வீட்டுக்கு ஒரு நாள் மூன்று பெரியவர்கள் வந்தார்கள். நீண்ட நேரம் பயணம் செய்த களைப்பு அவர்களிடம் தெரிந்தது.
இவர்களைப் பார்த்த அந்த வீட்டுப் பெண்மணி, 'உள்ளே வாருங்கள்... என் கணவர் வந்துவிடுவார் உணவருந்தலாம்...' என்று அழைத்தாள்.
'ஆண்மக்கள் இல்லாத வீட்டில் நாங்கள் உணவருந்த மாட்டோம். அதனால் உன் கணவன் வீடு திரும்பும் வரை, இங்கேயே காத்திருக்கிறோம்...' என்று அவர்கள் திண்ணையிலேயே இளைப்பாற ஆரம்பித்தார்கள்.
வயல்வேலைக்குப் போயிருந்த கணவன் மாலையில் வீடு திரும்பினான். உடனே அவனது மனைவி, திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்த பெரியவர்களிடம் சென்று, 'என் கணவர் வந்துவிட்டார். இப்போது எங்கள் வீட்டுக்குள் வர உங்களுக்கு
தடையில்லையே?' என்று கேட்க... அவர்கள், 'தடையில்லை... ஆனால், ஒரு நிபந்தனை. எங்களில் ஒருவர் மட்டுமே உங்கள் வீட்டுக்கு வரமுடியும்' என்றனர்.
அந்தப் பெண்மணி காரணம் புரியாமல் விழிக்க... அவர்களில் மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்த பெரியவர், 'என் பெயர் அன்பு. இவன் பெயர் வெற்றி. அவன் பெயர் செல்வம். எங்களில் ஒருவரைத்தான் வீட்டுக்குள் அழைக்க முடியும். அதனால் யாரை அழைப்பது என்று நீயே தேர்ந்தெடுத்துக்கொள்...' என்று சொல்ல, 'வந்திருப்பவர்கள் வழிப் போக்கர்கள் அல்ல... செல்வம், வெற்றி, அன்பு என்ற மூன்றுக்கும் அதிபதியாக இருக்கும் தேவர்கள்!' என்பது அந்தப் பெண்மணிக்குப் புரிந்தது.
பூரிப்போடு வீட்டுக்குள் ஓடிய பெண்மணி, விஷயத்தைக் கணவனிடம் சொன்னாள். கணவனுக்கு பரவசமும் பதற்றமும் தொற்றிக்கொண்டது. 'வாழ்க்கையில் வெற்றிதான் முக்கியம். அதனால் அவரை நம் வீட்டுக்கு அழைக்கலாம்' என்று யோசனை சொன்னான்.
அதற்கு இவள், 'வெற்றி வந்தால் மட்டும் என்ன பயன்? செல்வம்தானே முக்கியம். அதனால் செல்வத்தை அழைத்து வரலாம்' என்று பரபரத்தாள்.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்ட அவர்களின் மருமகள் சொன்னாள்... 'வெற்றியையும் செல்வத்தையும்விட அன்பு இருந்தால்தான் கணவன், மனைவி, குழந்தை, மாமா, அத்தை என்று நாமெல்லாரும் சந்தோஷமாக ஒற்றுமையாக இருக்க முடியும். அதனால், அன்புதான் எல்லா வற்றுக்கும் அடிப்படை...' என்று சொல்ல, அந்த யோசனையை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள்.
உடனே அந்த வீட்டின் தலைவி வீட்டுக்கு வெளியே சென்று, 'உங்களில் அன்பு யாரோ, அவர் உள்ளே வரலாம்...' என்று சொல்ல, அன்பு என்ற பெரியவர் வீட்டின் உள்ளே சென்றார். அன்பைத் தொடர்ந்து வெற்றி, செல்வம் என்ற மற்ற இரண்டு பெரியவர்களும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். இதைப் பார்த்த அந்தப் பெண்மணிக்கு ஆச்சரியம்!
பிறகு அவர்கள் சொன்னார்கள் - 'நீங்கள் வெற்றியையோ, செல்வத்தையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வீட்டின் வெளியி லேயே தங்கிவிட்டிருப்போம். ஆனால், அன்பை நீங்கள் அழைத்ததால்தான், நாங்கள் இருவரும் உங்கள் வீட்டுக்குள் வந்தோம். காரணம், அன்பு எங்கு சென்றாலும் அதைப் பின்பற்றி, அதன் பின்னாலேயே செல்ல வேண்டும் என்பதுதான் ஆண்டவன் எங்களுக்கு இட்ட கட்டளை!'

No comments: