Thursday, November 27, 2008

நமது பால்ய காலத்தை!
'பொய் சொல்லக்கூடாது... திருடக்கூடாது... கஷ்டம் வந்தால் மூட்டை தூக்கிக்கூடப் பொழைக்கலாம், தப்பில்லை...' என்று எத்தனை எத்தனை நல்ல விஷயங்களை நமக்குக் கற்றுத் தந்தார்கள்.
ஆனால், இன்று..? அந்த அடிப்படை நல்லொழுக்கமே மெள்ள மெள்ள நீர்த்துப்போய்க் கொண்டிருக்கிறதோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. பாமரர்களைவிடப் படித்தவர்களும் விஷயம் தெரிந்தவர்களுமே அதிகம் பொய் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.
வீட்டில் போன் மணி அடித்தால், 'அப்பா வீட்டில் இல்லைனு சொல்லு' என்று குழந்தைகளுக்கு நாமே பொய் சொல்லக் கற்றுத் தருகிறோம்.
'ஏன் லேட்..?' என்று மனைவி கேட்டால், நம் கைவசம் ஏதோ ஒரு பொய் எப்போதும் தயாராக இருக்கிறது.
தெரிந்தே ஒரு பொய்யை மெய் என்று நம்புவதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறது, தெரியுமா..?
இதோ, இந்தக் கதையைப் படியுங்கள்.
ஒரு முறை முல்லா, பக்கத்து வீட்டுக்காரரிடம் பானை ஒன்றை இரவல் வாங்கினார். சில நாட்களுக்குப் பிறகு, பக்கத்து வீட்டுக்காரர் தயங்கித் தயங்கி, ''என் பானையைத் திருப்பிக் கொடுக்க முடியுமா..?'' என்று முல்லாவிடம் கேட்டார்.
''அடடா... உங்களிடம் இரவல் வாங்கிய பானையை உடனே திருப்பிக் கொடுக்காமல் மறந்துபோனதிலும் ஒரு லாபம் இருக்கிறது. ஆமாம்... உங்கள் பானை ஒரு குட்டி போட்டிருக்கிறது, பாருங்கள்!'' என்று சொல்லி, தான் இரவலாக வாங்கிய பானையுடன் சேர்த்து ஒரு குட்டிப் பானையையும் கொடுத்தார் முல்லா. பக்கத்து வீட்டுக்காரருக்குத் தாங்கமுடியாத சந்தோஷம்.
அடுத்த வாரமே முல்லா மறுபடியும் பக்கத்து வீட்டுக்காரரிடம் சென்று, ''போன தடவை கொடுத்ததைவிடப் பெரிய பானை ஒன்று இருந்தால், இரவலாகக் கொடுங்களேன்!'' என்று கேட்க... அவரும் 'ஒன்றுக்கு இரண்டாகப் பானை கிடைக்கும்' என்று சந்தோஷத்தோடு, வீட்டிலிருந்த மிகப்பெரிய பானையைத் தூக்கி முல்லாவிடம் கொடுத்தார்.
ஒரு வாரம் ஆயிற்று. பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் சென்று, தான் இரவலாகத் தந்த பானையைத் திரும்பக் கொடுக்க முடியுமா என்று கேட்டார்.
''அதை ஏன் கேக்கறீங்க..? நேத்து உங்க பானை செத்துப்போச்சு!'' என்றார் முல்லா.
பக்கத்து வீட்டுக்காரருக்கு மகா எரிச்சலாகி விட்டது! ''என்னை என்ன மடையன்னு நினைச்சியா..? பானை எப்படிச் செத்துப்போகும்..?'' என்றார் கோபமாக.
''பானை குட்டி போட முடியும்னு உன்னால் நம்பமுடியுது. பானை செத்துட்டதுனு சொன்னா நம்பமுடியலையா..?'' என்று திருப்பிக் கேட்டார் முல்லா. பக்கத்து வீட்டுக்காரர் வந்த சுவடே தெரியாமல் நடையைக் கட்டினார்.
இப்போது புரிகிறதா..? பொய் சொல்வது எவ்வளவு தப்போ, அவ்வளவு தப்பு - பொய் என்று தெரிந்தும் அதை நம்புவது!
சரி, நாம் பொய் சொல்லும்படியான அவசியம் ஏற்படாதிருக்க என்ன வழி..?
இல்லை, முடியாது போன்ற வார்த்தைகளைச் சொல்லக் கற்றுக் கொண்டால், ஏறக்குறைய ஐம்பது சதவிகிதப் பொய்களைச் சொல்லவேண்டிய அவசியமே ஏற்படாது.
ஆபீஸில் உடன் வேலை செய்பவர் மோட்டார்சைக்கிளை இரவலாகக் கேட்கிறார். 'ஸாரி... என் மோட்டார் சைக்கிளை நான் யாருக்கும் இரவல் கொடுப்பதில்லை' என்று நேரடியாகச் சொல்லிவிட்டால் எதிராளியின் முகம் வாடிப்போகுமே என்று பயந்து, 'இல்லைப்பா... பெட்ரோல் இல்லை, பிரேக் பிடிக்கலை...' என்று வாய்க்கு வந்த பொய்யைச் சொல்கிறோம். எதிராளியின் முகம் வாடிப் போய்விடக்கூடாது என்பதற்காக, நாம் பொய்யன் என்ற பட்டத்தைச் சுமப்பது எந்த விதத்தில் சரி..?
பொய் சொல்லக்கூடாது என்றால்... மனைவி, தாய், தந்தை, குடும்பத் தினர், நண்பர்கள் இவர்களிடம் எல்லாம் பொய் சொல்லலாமா..? அப்படியே பொய் சொன்னாலும், அது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்..?
ஒரு சின்னக் கதை... ஒரு கல்லூரியில் நான்கு நண்பர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். தாவரவியல் மாணவர்கள். ஒரே ஒரு பரீட்சையைத் தவிர, மற்ற எல்லா பரீட்சையும் எழுதிவிட்டார்கள். மிச்சமிருந்த ஒரு பரீட்சைக்கு இன்னும் ஒருவார காலம் இருந்தது.
மேலும், அது சுலபமான பேப்பர்தான் என்பதால், இடைப்பட்ட காலத்தில் பக்கத்தில் இருந்த ஒரு மலைவாசஸ்தலத்துக்கு பிக்னிக் போனார்கள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஜாலியாக இருந்தார்கள். அவர்கள் கிளம்பவேண்டிய தருணம் வந்தது.
அப்போது ஒரு மாணவன், ''க்ளைமேட் அருமையாக இருக்கிறது. இன்றிரவும் இங்கேயே தங்கிவிட்டு, நாளை காலை ஆறு மணிக்கு காரில் கிளம்பினால் போதும்... பரீட்சை நேரத்துக்குக் கல்லூரிக்குப் போய்விடலாம்...'' என்றான்.
'அதுவும் சரிதான்' என்று மாணவர்கள் அன்று முழுவதும் அங்கேயே கோலாகலமாகக் கழித்துவிட்டு, இரவு தாமதமாகத் தூங்கினார்கள். நெடுநேரம் கழித்தே கண்விழித்தார்கள். 'சரி, புரொபசரிடம் ஏதாவது பொய் சொல்லி, மாற்றுப் பரீட்சைக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம்' என்று நம்பிக்கையோடு புறப்பட்டார்கள்.
புரொபசர் முன் நல்ல பிள்ளைகள் மாதிரி வந்து நின்றவர்கள், ''சார்... நாங்கள் அரிதான சில தாவரங்களைச் சேகரிப்பதற்காக ஒரு மலைவாசஸ்தலத்துக்குச் சென்றிருந்தோம். அங்கிருந்து நேராகப் பரீட்சை எழுதக் கல்லூரிக்கு வந்துவிடலாம் என்ற திட்டத்தில், விடியற்காலை காரில் கிளம்பினோம். வழியில் கார் பஞ்ச்சராகிவிட்டது. அதனால் பரீட்சை எழுத முடியவில்லை. நீங்கள்தான் பெரிய மனசு பண்ணி, எங்களுக்கு மாற்றுப் பரீட்சை வைக்க வேண்டும்...'' என்று பொய்யை மெய்மாதிரி உருகிச் சொன்னார்கள்.
பேராசிரியரும் ஒப்புக்கொண்டார். அந்த நான்கு மாணவர்களையும் நான்கு வெவ்வேறு அறைகளில் அமர வைத்து பரீட்சை எழுதச் சொன்னார். மாணவர்களுக்கு செம குஷி. உற்சாகத்துடன் பரீட்சை எழுத உட்கார்ந்தார்கள்.
முதல் கேள்வி மிகவும் சுலபமாக இருந்தது. மாணவர்கள் அதற்கு விடை எழுதிவிட்டு, அந்தக் கேள்விக்கான மார்க் என்ன என்று பார்த்தார்கள். ஐந்து. சரி என்று அடுத்த பக்கத்தைத் திருப்பினார்கள். 95 மார்க் என்ற குறிப்புடன் காணப்பட்ட அடுத்த கேள்வி, அவர்களின் முகத்தை அறைந்தது.
அந்தக் கேள்வி - 'உங்கள் காரில் பæசரானது எந்த டயர்..?'
பæசர் என்று பொய் சொன்னார்களே தவிர... இப்படி ஒரு கேள்வி வரும், அதற்கு இன்ன டயர்தான் பæசர் ஆனது என்று நாலு பேரும் ஒன்றுபோல் பதில் சொல்ல வேண்டும் என்று பேசி வைத்துக் கொள்ளவில்லையே!
பொய் என்பது தீக்குச்சியைப் போல. அது அந்த கணத்துக்கு மட்டுமே பலன் கொடுக்கும். உண்மை என்பது சூரியனைப் போல... அது வாழ்நாள் முழுதும் மட்டுமல்ல, வாழ்ந்து முடிந்த பிறகும்கூடப் பலன் கொடுக்கும்.
===============

No comments: